மதுரை

மதுரையில் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக அலுவலகத்தை இடம் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு

13th Sep 2019 08:20 AM

ADVERTISEMENT

மதுரையில் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகத்தை சென்னை அலுவலகத்துடன்  இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அனுமதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் வெளிநாட்டு வர்த்தக இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இந்த அலுவலகம் செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அலுவலகம் மதுரையில் மட்டுமே இருக்கிறது. 
இந்நிலையில், மதுரையில் செயல்படும் இணை இயக்குநர் அலுவலகத்தை சென்னையில் உள்ள வட்டார அலுவலகத்துடன் இணைக்க அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். 
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு  வர்த்தகம் சம்பந்தமான 9 வகையான பணிகள் இன்னும் முழுமையாக  மின்னணு மயமாக்கப்படாத நிலையில்,  அலுவலகங்களை இணைப்பது ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தும்.  தென்மாவட்டங்களின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்காத வகையில் மதுரையில் இணை இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட  மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏற்றுமதி வணிகம் பாதிக்கும்:இதுகுறித்து தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மதுரையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அலுவலகத்தை தென்மாவட்டங்களைச் சேர்ந்த  ஏராளமான ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.  
நிகழ் ஆண்டு (2019) முதல் உரிமங்கள் பெறுவதற்கான நடைமுறை இணைய வழியில் நடைபெறுகிறது என்றாலும், மற்ற ஏற்றுமதி-இறக்குமதி நடைமுறைகள் பழைய நடைமுறையிலேயே இருக்கின்றன. 
இப்பகுதியைச் சேர்ந்த சிறு ஏற்றுமதியாளர்கள் ஏதாவது விளக்கம் பெற வேண்டுமெனில் சென்னைக்குப் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.  இதனால் தேவையற்ற அலைச்சல், காலவிரயம் ஏற்படும். வெளிநாட்டு வர்த்தக அலுவலகம் மதுரையிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT