மதுரை

நாட்டிலேயே தூய்மையான புனித தலங்கள்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு 2 ஆம் இடம்

10th Sep 2019 10:27 AM

ADVERTISEMENT

நாட்டிலேயே இரண்டாவது தூய்மையான புனிதத் தலமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேர்வு செய்யப்பட்டு 2 ஆம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 
இக்கோயிலைச் சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள இரட்டை குப்பைத் தொட்டிகள், கோயிலைச் சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடைசெய்தல், 24 மணி நேர துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் அமைத்தல்,  பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல்,  மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இக்கோயில் 2 ஆவது தூய்மையான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.   
புதுதில்லியில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஜல் சக்தி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஜல் சக்தித் துறை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரிடம் இருந்து விருதை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பெற்றுக்கொண்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT