மதுரை

திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு இரு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

10th Sep 2019 10:24 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தை அடுத்த சோளங்குருணி, குசவன்குண்டு ஆகிய இரு கிராமங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோளங்குருணி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம்  குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தணணீர் வந்தாலும் துர்நாற்றத்துடன் வருகிறதாம். 
இதனால் இப்பகுதி மக்கள் 1 குடம் தண்ணீர் ரூ.10 க்கு தனியாரிடம் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. கண்மாய்களும் வறண்டதால் கால்நடைகளை விற்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதைத் தொடர்ந்து, வளையங்குளம் - திருப்புவனம் சாலையில் திங்கள்கிழமை  காலி குடங்களுடன் இப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர் . தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நடத்திய பேச்சு வார்த்தையில், உடனடியாக சோளங்குருணியில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   
மற்றொரு புகுதியில் மறியல்: இதேபோல திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குசவன்குண்டு ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிராமத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின்சார கட்டணம் செலுத்தாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. 
இதன் காரணமாக தனியார் லாரிகளில் ரூ.10 கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாம். 
இதனைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மின்வாரியத்திற்கு உடனடியாக மின்கட்டணத்தை செலுத்தியதுடன், பழுதான ஆழ்துளைக் கிணறுகளையும் ஆழப்படுத்தி தருவதாக உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT