மதுரை

தமிழ் மொழியை பேசுவதில் தாழ்வு மனப்பான்மை கூடாது: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. பேச்சு

7th Sep 2019 07:49 AM

ADVERTISEMENT

தாய்மொழி தமிழை பேசுவதில் தாழ்வு மனப்பான்மை கூடாது என்று தென் சென்னை  மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன்  பேசினார்.
 மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியின் தமிழ் உயராய்வு நடுவத்தின் இலக்கியக்கழகம் மற்றும் இந்திய குடிமைப்பணி தேர்வாணையத் திறன் மேம்பாட்டுத்தளம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: 
 இந்திய குடியரசு முன்னாள் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த ஆசிரியராக அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாகத்துடன் பணியாற்றியவர். ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தனது வாழ்க்கையின் மூலமாக வாழ்ந்து காட்டியவர். 
ஆசிரியர்கள் மாணவிகளை புரிந்துகொள்ள வேண்டும். மாணவிகள் ஆசிரியர்களையும் தங்களது பெற்றோரையும் புரிந்து கொள்ள வேண்டும். புரிதலில்தான் வாழ்க்கை அடங்கியுள்ளது. 
ஆசிரியப்பணி என்பது சாதாரணமானது அல்ல. அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தியாகம் ஆகியவை அடங்கிய தவம் போன்றது. கல்வி என்பது பாடங்களையும், நன்னெறிகளையும் மட்டும் போதிப்பது அல்ல. வாழ்வியல் அறங்களையும், உயர்ந்த விழுமியங்களையும், ஆளுமைத்திறனையும் போதிப்பதுதான் கல்வி. மனிதம் சார்ந்த அறங்களை உருவாக்குவது கல்விதான். இன்றைய தொழில்நுட்ப உலகில் கற்றல் செயல்பாட்டுக்கு நவீன உபகரணங்கள் வந்துள்ளன. இணையதளம், ஸ்கைப் மூலம் நேரடியாக பாடங்களும் நடத்தப்படுகிறது. 
படிப்பதற்கு கூட கையடக்க கருவிகள் வந்துவிட்டன. ஆனால், மாணவிகளை ஆளுமைத்திறன் உள்ளவர்களாக, வாழ்க்கையில் வெற்றி தோல்வி, ஏற்றத் தாழ்வு இவற்றை சந்திக்கும் மனப்பக்குவம் உள்ளவர்களாக, மனிதத்தன்மை கொண்டவர்களாக மாற்றுவது ஆசிரியர்கள் மட்டுமே. 
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், தலைவர்கள், வெற்றியாளர்கள் அனைவரையும் உருவாக்கியது அவர்களின் ஆசிரியர்கள்தான் என்பதை மாணவ சமூகம் மறந்து விடக்கூடாது. இப்போதையச் சூழலில் பொது இடங்களில் தமிழில் பேசிக்கொள்வது கௌரவக் குறைச்சலாகக் கருதப்படுகிறது. 
நம்முடைய தாய்மொழி தமிழ் 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. உலகில் உள்ள செவ்வியல் மொழிகளில் மூத்த மொழி தமிழ். எனவே நமது தாய்மொழியை பேசுவதில் நமக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது. தாய்மொழியில்தான் நம்முடைய உணர்வுகளை, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த முடியும். எனவே நமது தாய்மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT