மதுரை

வாலாந்தூர் கண்மாய் குடிமராமத்துப் பணியில் முறைகேடு: பொதுமக்கள் புகார்

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

வாலாந்தூர் கண்மாய் குடிமராமத்துப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாலாந்தூர் கண்மாய் பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
  மதுரை மாவட்டம் வாலாந்தூரில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாயில், குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. கண்மாயை ஆழப்படுத்தி, புனரமைப்பது என்ற நோக்கத்தை சிதைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 பல ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கண்மாயின் கரையை உடைத்து, அகலத்தைக் குறைத்து உயரப்படுத்தி வருகின்றனர். இதனால், கண்மாய்க்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் காலங்களில் கரையின் உறுதித் தன்மை குறைந்து உடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 கண்மாயின் கரை உடைப்பு ஏற்படும் நிலையில், விவசாயிகளுக்கு அது பேரிழப்பாக அமைந்துவிடும். ஆகவே, கரையின் உறுதித்தன்மையை மீட்க பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது அவசியம். 
 மேலும் கண்மாயில் நடைபெறும் சில கட்டுமானப் பணிகளுக்காக, கண்மாயில் இருந்து எடுக்கப்படும் மண் பயன்படுத்தப்படுகிறது. 
 குடிமராமத்து பணியைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சங்கம், உள்ளூரில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அறிமுகம் இல்லாத உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தலையீட்டில் இந்த சங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. 
  ஆகவே, இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT