மதுரை

மதுரை மாவட்டத்தில் 39 ஆயிரம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடிக்கு இலக்கு: ஆட்சியர் தகவல்

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 200 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையில், நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி:
  பெரியாறு வைகை பாசனப் பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் குறுவையில் 3,300 ஹெக்டேரும், சம்பா பயிரில் 42 ஆயிரத்து 900 ஹெக்டேரும் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடையும் வகையில் வேளாண் துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
       நடப்பு பருவ நெல் சாகுபடிக்காக, சான்று பெற்ற தரமான விதைகள் தமிழக அரசின் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மத்திய கால ரகங்களான டி.கே.எம்.13 (130 டன்கள்), என்எல்ஆர் 3449 (51 டன்கள்), ஏஎஸ்டி16 (8 டன்கள்), பிபிடி (15 டன்), ஜேஜிஎல் 1798 (18 டன்) குறுகிய கால ரகமான கோ51 (32 டன்) விதைகள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தங்களது தேவைக்கான விதைகளை மானிய விலையில் பெறலாம்.
  நீர்சேமிப்பு மற்றும் அதிக மகசூலுக்காக திருந்திய நெல் சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்றலாம். இந்த முறையில் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் என்ற அளவில் விதைப்பு செய்து, நாற்றங்கால் தயார் செய்யலாம். 14 வயதான நாற்றுகளை 22.5 செமீ-க்கு 22.5 செமீ என்ற இடைவெளியில் இயந்திர நடவு அல்லது வரிசை நடவு செய்து பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து நல்ல மகசூல் பெறலாம்.
     நடப்பு பருவத்தில் மதுரை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 39 ஆயிரத்து 200 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 இயந்திர நடவுக்கு மானியம்  மற்றும் தேசிய உணவு உற்பத்தி இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
 ஆகவே, விவசாயிகள் தங்களது பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிப் பயன்பெறலாம் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT