மதுரை

மதுரை புத்தகத் திருவிழா

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

"சிறிய வார்த்தைகளில் உலகுக்கே புத்தி கூறியது தமிழ்மொழி'
உலகுக்கே சிறிய வார்த்தைகளில் புத்தி கூறியது தமிழ் மொழி மட்டுமே என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.
மதுரையில் நடைபெற்று வரும் புத்தகக்கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்குக்கு பபாசி நிர்வாகி செ.முருகப்பன் வரவேற்றார். இதில் "தெய்வத்தமிழ்' என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியது: 
வாசிப்பின் அவசியம் பற்றி அறிஞர்கள் கூறும்போது புத்தகங்களை எரிப்பதை விட மிக மோசமான குற்றம் எது என்றால் புத்தகத்தை வாசிக்காமல் இருப்பது என்பர். வாசிப்பின் அவசியம் தொடர்பாக இதை விட அழுத்தமாக பதிவு செய்யமுடியாது. நவீன கண்டுபிடிப்புகள் வாசிப்புக்கு தடையாக உள்ளன. 
30 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிய பெட்டியாக வீட்டுக்குள் வந்த தொலைக்காட்சி இன்று வீட்டின் சுவர் அளவுக்கு பிரமாண்டமாக அமர்ந்துள்ளது. கையளவு மட்டுமே உள்ள செல்லிடப்பேசி ஆயிரம் விசயங்களை அதற்குள் அடக்கி வைத்துள்ளது. 
செல்லிடப்பேசியின் வருகையால் மொழியே மிகவும் குறுகி விட்டது. செல்லிடபேசியில் குறுந்தகவல் அனுப்பும் எவரும் முழுமையாக பேசிக் கொள்வது இல்லை. ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவையில்லை. அந்நாட்டின் நூலகத்தை அழித்தால் போதும். 
இலங்கையில் தமிழினத்தை அழிக்க சிங்களவர்கள் எரித்தது யாழ்ப்பாண நூலகத்தை. 1934-இல் 834 நூல்களுடன் தொடங்கப்பட்ட நூலகத்தை எரிக்கும்போது அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. ஆனால் இவற்றால் எல்லாம் தமிழை அழித்து விடமுடியாது. தமிழ் சாதாரண மொழி அல்ல அது தெய்வ மொழி. தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது வாழும் வழி. தமிழில் உள்ள ழகரம் உலகத்தின் வேறு எந்த மொழியிலும் இல்லை. அதனால் தான் அது தமிழ் என்று அழைக்கப்படுகிறது. ழகரத்தை அதன் சரியான உச்சரிப்புடன் உச்சரிக்கும்போது கபாலத்தில் அமிர்தம் சுரக்கும் என்பது ஞானிகள் கூற்று. 
மேலும் எளிய மொழியில் உலகுக்கே புத்தி கூறியது தமிழ் மொழி. ஒளவையாரின் அறம் செய்ய விரும்பு உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தமிழில் உள்ள உயிர் மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றின் வடிவமும் மனிதர்கள் பிறப்பில் தொடங்கி முதுமை வரை நிற்கும் வாழ்க்கை வடிவத்தை உணர்த்துகிறது. வரலாறு செல்வந்தர்களை நினைவில் வைத்திராது. ஞானிகளை மட்டுமே வைத்திருக்கும். 
நமது நாட்டில் இதுவரை எத்தனை எத்தனையோ செல்வந்தர்கள் வாழ்ந்து சென்றுள்ளனர். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒளவை, வள்ளுவர் ஆகியோரின் பெயர் தான் நிலைத்து நிற்கிறது என்றார். பபாசியின் இணை துணைச் செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.

காந்திய சிந்தனையை பரப்பும் சர்வோதயா இலக்கியப் பண்ணை
மதுரையில் 1969-இல் தொடங்கப்பட்டது சர்வோதயா இலக்கியப்பண்ணை. தற்போது 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வணிக நோக்கமின்றி சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டு வாசிப்பு உலகில் பெரும் சேவையாற்றி வருகிறது சர்வோதயா இலக்கியப் பண்ணை. 
காந்திய இலக்கியம், மாணவர்களுக்கு தேவையான பல்துறை நூல்கள், இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், அனைத்து பதிப்பகங்களின் நூல்கள் என அனைத்து நூல்களும் சர்வோதயா இலக்கியப் பண்ணையில் கிடைக்கிறது. சேவை நோக்கோடு இயங்குவதால் அதிக லாபம், குறைந்த லாபம் தரும் நூல்கள் என்று பார்க்காமல் மக்களுக்குத் தேவையான அனைத்து நூல்களையும் வழங்குகிறது. தற்போது மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு, மகாத்மா காந்தியும் மகாகவியும், அண்ணலும் அமிர்த் கௌரும், மகாத்மா காந்தியும் கோபுராஜூ ராமச்சந்திரராவும்,  காந்தி எழுதிய என் வாழ்க்கை கதை, வினோபாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலான அதிசய சோதனை ஆகிய நூல்கள் சிறப்பு வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. 
சர்வோதயா இலக்கியப் பண்ணையில்  ரூ.50-க்கு  விற்பனை செய்யப்படும் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். காந்திய இலக்கியங்களை விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனைகளை பரப்பும் பணியிலும் சர்வோதயா இலக்கியப் பண்ணை ஈடுபட்டு வருகிறது.

வே.புருஷோத்தமன், சர்வோதயா இலக்கியப்பண்ணை, மதுரை.

என்ன புத்தகம் வாங்கினோம்

ADVERTISEMENT


இந்திய ஆட்சிப்பணித்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். புத்தக கண்காட்சியில் ஆட்சிப்பணி தொடர்பான புத்தகங்கள் வாங்கியுள்ளேன். மேலும் தேர்வு நூல்கள் தவிர்த்து நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், எழுத்தாளர் லட்சுமியின் கதைகள் உள்ளிட்டவற்றை 
வாங்கியுள்ளேன். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே எனது வாசிப்பு தொடங்கியது.  எனது தந்தை எழுத்தாளர் மு.அப்பாஸ் மந்திரியின் கதைகள், இதர எழுத்தாளர்களின் கதைகளை வாசித்துள்ளேன். பெருமை பெற்ற இந்திய பெண்மணிகள் என்பது உள்பட இரண்டு நூல்களையும் நான் எழுதி வெளி வந்துள்ளது. தினசரி வாசிப்பு இல்லாமல் தூங்கச்செல்வது இல்லை. வாசிப்பால் தான் நமது அறிவுலகம் விரிவடைகிறது.
ஏ.அனீஸ் பாத்திமா (27) மாணவி  போடி.

மதுரை புத்தகக் கண்காட்சிக்கு அருப்புக்கோட்டையில் இருந்து வருகிறேன். பொன்னியின் செல்வன் 5 பாகங்கள், கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வகை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் வாங்கியுள்ளேன். நேரத்தை வீணாக்காமல் தேவையான புத்தகங்களை வாசிப்பது அறிவை விசாலமாக்கும். தொலைக்காட்சிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் நேரத்தை விரயமாக்காமல் இருக்க வாசிப்பு உதவுகிறது. மேலும் பணியிடங்களில் ஓய்வு நேரங்களில் நூல் வாசிப்பு நம்முடைய வேலையை மட்டும் நாம் பார்த்துக் கொண்டிருக்க உதவுகிறது. இதனால் பணியிடங்களில் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்க்க இயல்கிறது.
கே.பாண்டியன் (50) அரசு மருத்துவமனை ஊழியர் அருப்புக்கோட்டை


புத்தகக் கண்காட்சியில் ரமணி சந்திரன் கதைகள், ஜாவர் சீதாராமன் கதைகள், அநுத்தமா நாவல்களை வாங்கியுள்ளேன். மேலும் சாண்டியல்யனின் வரலாற்று நூல்களையும் வாங்கியுள்ளேன். சிறுவயதில் வீட்டில் தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் கிடையாது. இதனால் வீட்டில் உள்ள பெண்களுக்கு வாசிப்பது மட்டுமே பொழுதுபோக்காக இருந்து வந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நூல் வாசிப்பில் ஈடுபட்டு வந்துள்ளேன். இப்போது உள்ள தலைமுறை செல்லிடப்பேசி, தொலைக்காட்சிகளில் நேரத்தை கழிக்கின்றனர். ஆனால் சிறு வயதில் தொடங்கிய வாசிப்பு இப்போதும் தொடர்கிறது. வீட்டில் கணவரும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர் என்பதால் நூல் வாசிப்பை தொடர்கிறோம். 
கே.மணிமேகலை (58), பைபாஸ்சாலை  மதுரை.

திருச்சி எனது சொந்த ஊர். திருமணத்துக்கு பிறகு மதுரையில் வசித்து வருகிறேன். மதுரை புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறையாக வந்துள்ளேன். ஜாவர் சீதாராமனின் கதைகளை தேடிப்பிடித்து வாங்கியுள்ளேன். மேலும் தி.ஜானகிராமன், பாலகுமாரன், கதைகளும் வாங்கியுள்ளேன். திருமணத்துக்கு முன்பு பெற்றோரை சார்ந்திருப்பதால் பிடித்த புத்தகங்களை வாங்குவதில் சிறிது தயக்கம் இருக்கும். திருமணத்துக்கு பிறகு நமக்கான தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் பிடித்த புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன். வாசிப்பை  எதற்காகவும் விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
என்.கௌரி (25) அழகப்பன் நகர் மதுரை.


புத்தகக் கண்காட்சியில் கி.ராஜநாராயணன் நூல்கள் உள்பட பல்வேறு நூல்களை வாங்கியுள்ளேன். பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், முதியவர்களுக்கு நூல்கள் மட்டுமே நெருங்கிய நட்பாக இருக்கும். 70 வயதுகளை கடந்தவர்கள் நூல்கள் இல்லாமல் இருக்க முடியாது. நூல்கள் ஆத்மார்த்தமான உறவுகளை 
உருவாக்குகிறது. தனிமையின் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பவை நூல்கள். எங்களது சிறு வயதில் இப்போதுள்ள வசதிகள் கிடையாது. எதையும் உடனடியாக வாங்கவும் முடியாது. எனவே நாங்களாகவே வாசித்து தெரிந்து வளர்ந்து வந்துள்ளோம். இன்றைக்கு உள்ள நவீன வசதிகளை இளைய தலைமுறையினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். 
ஜி.தனபாலன் (72) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆத்திகுளம், மதுரை.

வாசிப்பு இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது
மதுரை புத்தக கண்காட்சியில் சோ-வின் ராமாயணம், சித்த மருத்துவ தொகுப்பு,  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முக்கிய உரைகளின் தொகுப்பான தமிழரை உயர்த்தும் தலைமகன் உரைகள் என்ற மிக முக்கியமான நூலை வாங்கியுள்ளேன். சிறு வயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புத்தகக் கண்காட்சிக்கு தொடர்ந்து வருகிறேன். ஓய்வு நேரங்களிலும், பயணங்களின்போதும் நூல்களை எப்போதும் வாசித்தே வந்துள்ளேன். மதுரை மாநகர மேயராக பதவி வகித்தபோதுதான் புத்தகக் கண்காட்சிக்கு தமுக்கம் அரங்கை வழங்கினோம். அது இப்போது வரை தொடர்கிறது. தற்போதைய இளைய தலைமுறையினரின் கவனத்தை நவீன தொழில்நுட்பங்கள் திசை திருப்புகின்றன. இதனால் இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பொதுவாகவே குறைந்து வருகிறது. வாசிப்பு வசப்பட்டால் நம் வாழ்க்கையும் வசப்படும். வாசிப்பு இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது. வாசிப்பு மன நலத்தை பாதுகாக்கிறது.  குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.
செ.ராமச்சந்திரன், மாநகராட்சி முன்னாள் மேயர், மதுரை.


சிறுவர்களுக்கான அறிவியல் புனைவு நூல் வெளியீடு
மதுரை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் க.சரவணன் எழுதிய  "ஸ்பேஸ் கேம் " என்ற சிறார் அறிவியல் புனைவு நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  புக் பார் சில்ட்ரன் அரங்கு எண் 36, 37 இல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விமர்சகர் ந.முருகேசபாண்டியன் தலைமை வகித்தார்.  
மேகா பதிப்பக பதிப்பாளர் மே. அருணாச்சலம் முன்னிலை வகித்தார். 
எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ச.வின்சென்ட் "ஸ்பேஸ் கேம்' நூலை வெளியிட்டு பேசும் போது,  அனைவருக்கும் 
புரியும் வண்ணம் எளிமையாக நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவியல் புதினம் விண்வெளி குறித்து பல்வேறு தகவல்களை விளையாட்டாய் சொல்லுகிறது என்றார். 
முதல் பிரதியை பேராசிரியர் இரா.பிரபாகர் பெற்றுக் கொண்டு பேசும் போது,  தொடர்ந்து குழந்தைகளுக்காக எழுதிவரும் சரவணனின் இந்த படைப்பு அறிவியலை அற்புதமாக புனைவு வழியாக எடுத்துக் கூறுகிறது என்றார். 
கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிறப்பு அழைப்பாளராக 
பங்கேற்றார். கவிஞர்கள் ஆத்மார்த்தி , ரமேஷ், சுரேன், ஆசிரியர்கள் சிவராமன், சார்லெட் , சுலைகா பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தகக் கண்காட்சியில் இன்று
மதுரையில் நடைபெற்று வரும் 14-ஆவது புத்தகக் கண்காட்சியின் ஆறாம் நாள் நிகழ்வாக புதன்கிழமை மாலை நடைபெறும் கருத்தரங்குக்கு பபாசி செயற்குழு உறுப்பினர் சு.சுப்பிரமணியன் 
வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் இரா.பாஸ்கரன் தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில் கவிஞர் அரு.நாகப்பன்  "நெஞ்சில் நீ நின்றாய்' என்ற தலைப்பிலும், 
மு.சுலைகா பீவி "வாசிப்பை நேசிப்போம்' என்ற தலைப்பிலும், முனைவர் மு.அருணகிரி "புத்தகம் என் நண்பன்' என்ற தலைப்பிலும் பேசுகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT