மதுரை

மதுரையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: இலங்கை எம்.பி. பங்கேற்பு

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செவ்வாய்க்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
 விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் சபா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 750-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சதுர்த்தி தினத்தன்று இவற்றிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியின்  2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமையும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  மதுரை நகரில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து மக்கள் சபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விநாயகர் சிலைகள் கீழமாசி வீதிக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி, சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் திருமலை ராயர் படித்துறை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.  இதேபோல, மேலூரில் 77 சிலைகளும், எழுமலையில் 12 சிலைகளும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
  மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை இலங்கை எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடக்கி வைத்தார். 
 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இது போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
 இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா முன்கூட்டியே எச்சரித்திருந்தது. இருப்பினும் இலங்கை அரசு அதைப் பொருட்படுத்தவில்லை.
 இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் ராஜபட்ச. ஆனால், இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்திருக்காது என்கிறார் ராஜபட்ச. அரசியல் லாபத்துக்காக அவர் இவ்வாறு கூறுகிறார் என்றார். இந்து மக்கள் கட்சி நிர்வாகி சோலைக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மேலூர்:  நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து மகா சபா சார்பில் 47 பெரிய அளவிலான சிலைகளும், 30-க்கு மேற்பட்ட சிறிய சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அனைத்து சிலைகளும் வாகனங்களில் சிவன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
  ஊர்வலத்துக்கு இந்து மகா சபா மாவட்டச் செயலர் ரமேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பெரி.செல்லத்துரை முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி தலைவர் சுரேஷ் முன்னிலையில் திரையரங்கு அதிபர் கணேசன் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். நிறைவாக அனைத்து சிலைகளும் மண்கட்டி தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT