மதுரை

பாலி பிரப்போலின் பைகளுக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

4th Sep 2019 09:54 AM

ADVERTISEMENT

பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் மீது விதிக்கப்பட்ட தடையை  ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு : தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் நெகிழி பைகள் பயன்படுத்த தடைவிதித்து 2018 ஜூன் 25 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த தடை உத்தரவு  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்த அரசாணையில் பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் 2018 டிசம்பர் 8-இல் சேர்க்கப்பட்டன. 
பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் 50 மைக்ரான் அளவுக்கு அதிகமானது. இந்த பைகள் நுண்துளைகளைக் கொண்டவை என்பதால் சூரிய வெளிச்சம், காற்று, நீர் உள்ளிட்டவற்றை எளிதில் கடத்தக் கூடியவை. இயற்கையான சுண்ணாம்புக் கலவைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், எளிதில் மக்கக் கூடியது. 100 சதவீத மறுசுழற்சி செய்யக் கூடியது என்பதால் சுற்றுச் சூழல் பாதுகாப்புடையது. மத்திய அரசின் சிப்பெட் நிறுவன ஆய்வின்படி இந்த பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்த பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் உலகம் முழுமைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 மத்திய அரசின் பிளாஸ்டிக்  விதிகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பொருள்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பைகள் 50 மைக்ரான் அளவுக்கு அதிகமானவை என்பதால் நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பட்டியலில் பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதியே நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT