மதுரை

அரசு கேபிள் டிவி "செட் -டாப்' பாக்ஸ்களை வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

4th Sep 2019 09:55 AM

ADVERTISEMENT

அரசு கேபிள் டிவி "செட்-டாப்' பாக்ஸ் வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் எச்சரித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
 தமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மத்திய அரசின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று 2017 செப்டம்பர் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பு செய்து வருகிறது. டிஜிட்டல் ஒளிபரப்புக்காக பொதுமக்களுக்கு  "செட்-டாப்'  பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
  கேபிள்டிவி ஆபரேட்டர்கள்  "செட்-டாப்'  பாக்ஸ் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மத்திய தொலைத் தொடர்பு ஆணைய விதிமுறைகளின்படி, அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
 அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக அத்தகைய ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பை மாற்ற வேண்டும். இதை மீறும் ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்வது, உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மாதாந்திரக் கட்டணத் தொகையாக ரூ.154 (வரிகள் உள்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 140 இலவச சேனல்கள், 57 கட்டண சேனல்கள் என மொத்தம் 197 சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அரசு கேபிள் டிவி  "செட்-டாப்'  பாக்ஸ் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் தடையின்றி இணைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதகமாக செயல்படும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 அரசு கேபிள் டிவி நிறுவனத்தில்  "செட்-டாப்'  பாக்ஸ்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சில ஆபரேட்டர்கள், அதை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களின்  "செட்-டாப்'  பாக்ஸ்களைப் பெற்று ஒளிபரப்பு செய்கின்றனர். இத்தகைய ஆபரேட்டர்கள்,  அரசு கேபிள்  "செட்-டாப்'  பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 பொதுமக்கள் தங்களது வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட  "செட்-டாப்'  பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பின், அதை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்யலாம். தாங்கள் குடியிருப்பு வீட்டைக் காலி செய்து வேறு பகுதிக்குச் செல்லும்போதும் அல்லது டிடிஎச் இணைப்புக்கு மாறினாலோ அரசு  "செட்-டாப்'  பாக்ஸை, ஆபரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT