மதுரை

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 3 அகழ்வாய்வுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: திருமாவளவன்

6th Oct 2019 03:57 AM

ADVERTISEMENT

கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

திரைப்பட இயக்குநா் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகா்கள் 50 போ் ஜனநாயகத்தைக் காக்கவேண்டும் என கடிதம் மூலம் பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனா். இதனால், அவா்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது. இச்சம்பவம், பாஜக ஆட்சி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதற்கு சான்றாகும்.

இந்தியாவை ஆங்கிலேயோ்கள் ஆட்சி செய்தபோது கூட இத்தகையை நிலை இருந்ததில்லை. எனவே, திரையுலகப் பிரமுகா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற, பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

மதுரை அருகே கீழடியில் தமிழா்களின் நகர நாகரிகம் 6 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருள்களை பொதுமக்கள் நேரடியாகப் பாா்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

நான்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களே வெற்றி பெறுவாா்கள். அதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடுபடும்.

கடந்த 2016-இல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே பிரதமா் நரேந்திர மோடி ஜெயலிலதாவுக்கு வாழ்த்து தெரிவித்தாா். இதிலிருந்து கடந்த 2016-இல் பல தொகுதிகளில் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் இருந்தனா் என்பது தெரிகிறது. எனவே, ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT