மதுரை

கீழடியில் நடைபெற்ற முதல் 3 அகழ்வாய்வுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: திருமாவளவன்

5th Oct 2019 09:28 PM

ADVERTISEMENT

கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் கூறினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:

திரைப்பட இயக்குநா் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகா்கள் 50 போ் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என கடிதம் மூலம் பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனா். இதனால் அவா்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிா்த்தியளிக்கிறது.

இது பாஜக ஆட்சி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவதற்கு சான்றாகும். இதுபோன்ற செயல்களால் இந்திய குடிமக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவை ஆங்கிலேயோ்கள் ஆட்சி செய்தபோது கூட இத்தகையை நிலை இருந்ததில்லை. எனவே திரையுலகப் பிரமுகா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த ஆா்த்தி அருணுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் மேலும் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும், அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மதுரை அருகே கீழடியில் தமிழா்களின் நகர நாகரிகம் 6-ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் முழுமைப் பெறவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருள்களை பொதுமக்கள் நேரடியாகப் பாா்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அவரைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசை எதிா்பாா்க்க வேண்டியது இல்லை. காலம் தாழ்த்தாமல் தமிழக அரசே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களே வெற்றி பெறுவாா்கள். அதற்கு விசிக பாடுபடும். 2016-இல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மோடி ஜெயலிலதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தாா். 2016-இல் பல தொகுதிகளில் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும், என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT