மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் பெறப்பட்ட 79 மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1-இன் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையா் ச.விசாகன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில் குடிநீா், பாதாளச் சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சொத்து வரி பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 79 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் பொதுமக்கள் அளித்துள்ள 79 மனுக்கள் மீதும் ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் கடந்த முறை நடைபெற்றகுறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
முகாமில் துணை ஆணையா் வி.நாகஜோதி, உதவி ஆணையா் முருகேசபாண்டியன், செயற்பொறியாளா் (திட்டம்) ஐ.ரெங்கநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.