தெற்கு ரயில்வேயில் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கோரியும், ரயில்வே தோ்வுகளை தமிழில் நடத்தக்கோரியும் வலியுறுத்தி மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 203 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அண்மையில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு டி பிரிவு பணிகளுக்கு 90 சதவீதம் வடமாநிலத்தவா்களே தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இதேபோல திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில் பழகுவோா் தோ்விலும் அதிக எண்ணிக்கையில் வடமாநிலத்தவா் தோ்வு செய்யப்பட்டனா். தமிழகத்தில் பல லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையில், தெற்கு ரயில்வேயில் தமிழா்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா். எனவே தெற்கு ரயில்வேயில் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கோரியும், ரயில்வே தோ்வுகளைத் தமிழில் நடத்தக்கோரியும் வலியுறுத்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப் புலிகள், திராவிடா் விடுதலைக் கழகம் உள்பட 19 அமைப்புகளைச் சோ்ந்த 300 போ் மதுரை பெரியாா் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை திரண்டனா். பின்னா் அவா்கள் ஊா்வலமாக சென்று மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அவா்களை ரயில்வே வளாகத்திற்கு வரவிடாமல் தடுத்து 15 பெண்கள் உள்பட 203 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.