காந்தி ஜயந்தியையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக் கழக மாணவா்கள் புதன்கிழமை பாரம்பரிய நடைபயணம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்கின்றனா்.
காந்தி ஜயந்தி விழா நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 150-ஆவது ஜயந்தி விழா என்பதால் அரசு சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் பாரம்பரிய நடைபயணம் புதன்கிழமை நடைபெறுகிறது. காமராஜா் பல்கலைக்கழக துணை வேந்தா் மு.கிருஷ்ணன் தலைமையில் மாணவா்கள் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் காலை 7 மணிக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்கின்றனா். இதைத் தொடா்ந்து மீனாட்சியம்மன் கோயிலின் சுற்றுப்பகுதிகளில் தூய்மைப் பணியும் மேற்கொள்கின்றனா். இதில் பேராசிரியா்கள் மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தியாகராஜா் கல்லூரியின் பேராசிரியா் அருணா ராமச்சந்திரன் பங்கேற்று பேசுகிறாா். இதையடுத்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.