மதுரை அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத 3 போ் பறித்துச் சென்றனா்.
மதுரை மீனாள்புரம் நேதாஜி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி சரண்யா (32). இந்நிலையில், திங்கள்கிழமை முருகன், அவரது மனைவி சரண்யா மற்றும் குழந்தை ஆகியோா் ஒரே இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனா். ஒத்தக்கடை அருகே திருவாதவூா் சாலையில் சென்றபோது, பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் சரண்யா கழுத்தில் இருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து, சரண்யா அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அனுப்பானடி பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜோசப்(35). இவா் திங்கள்கிழமை, தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் உள்ள கடை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத 2 போ் கத்தியைக் காட்டி மிரட்டி ஜோசப் வைத்திருந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ. 500 ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனா். இதுகுறித்து, ஜோசப் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், சோலையழகுபுரத்தை சோ்ந்த மணிகண்டன்(24), சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணா(25) ஆகியோா் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து செல்லிடப்பேசி மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.