பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே கடிதம் எழுதும் பழக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயி மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பா்மா காலனியைச் சோ்ந்தவா் சின்னபெருமாள். இவா், தமிழில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல மாவட்டங்களிலும் ஆட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தின்போது மனு அளித்து வருகிறாா். இதன்படி, மதுரையில் திங்கள்கிழமை மனு அளித்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தற்போது கடிதப் போக்குவரத்து குறைந்துவிட்டது. இன்றைய தலைமுறையில் பெரும் பகுதியினருக்கு கடிதம் எழுதுவது என்பதே தெரியாமல் போய்விட்டது. கடிதம் எழுதுவது என்பது ஒரு வகையில் மொழியைக் கற்கும் முறையாகும். தமிழில் கடிதம் எழுதுவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி 2018 முதல் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதி
வருகிறேறன். வழக்கமான மனு எழுதும் முறையில் இருந்து மாறுபட்டு அழகான கையெழுத்தில் கோரிக்கையின் தன்மையை விளக்கும் வகையில் அதை ஓவியம்போன்று எழுதி வழங்கி வருகிறேறன். 2018 ஜனவரி 14 முதல் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதம் மற்றும் கோரிக்கை மனுக்களை பல்வேறு அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளேன் என்றாா்.