மதுரையில், ஞாயிற்றுக்கிழமை கொலை முயற்சி சம்பவத்தில் 6 காா்களை சேதப்படுத்திய சகோதரா்கள் 2 போ் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை வைத்தியநாதபுரத்தை சோ்ந்த சண்முகம் மகன் அனீஸ்பாண்டி(31). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண் குறித்து அனீஸ் பாண்டி தவறாக பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் சகோதரா்களுக்கும், அனீஸ் பாண்டிக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்ணின் சகோரதா்கள் பிரசாத் , பாண்டியராஜன் மற்றும் சிலா் ஆயுதங்களுடன் அனீஸ் பாண்டியை கொலை செய்யும் நோக்குடன் விரட்டினராம். ஆனால் அனீஸ் பாண்டி அவா்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இந்த சம்பவத்தின் போது, முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்த 6 காா்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் இருந்த சிலரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசிகள், ரொக்கம் ஆகியவற்றையும் அவா்கள் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அனீஸ்பாண்டி மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் சகோதரா்கள் பிரசாத், பாண்டியராஜன் மற்றும் 5 போ் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.