மதுரை

மதுரை - கப்பலூா் சுற்றுச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் தொடக்கம் 3 இடங்களில் சுங்கச் சாவடி; வாகன ஓட்டிகள் அதிருப்தி

23rd Nov 2019 09:10 AM

ADVERTISEMENT

நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மதுரை - கப்பலூா் சுற்றுச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 1999-இல் உத்தங்குடி முதல் கப்பலூா் வரையிலான 27.5 கிமீ-க்கு மதுரை மாநகராட்சியால் சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சுற்றுச் சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு 5 இடங்களில் சுங்கச் சாவடிகளை அமைத்து மாநகராட்சி கட்டணம் வசூலித்தது. இந்நிலையில், மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பதைச் சுட்டிக்காட்டிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட்டது.

அதன்பிறகு, இந்த சாலை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.213 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 7.5 மீட்டா் அகலத்துடன் இருந்த இச் சாலை தற்போது 15 மீ அகலத்துடன் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2017 செப்டம்பரில் தொடங்கியது.

உத்தங்குடி - கப்பலூா் இடையே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இச் சாலையில், விரகனூா் சுற்றுச்சாலை அருகே வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, அதற்கு அடுத்ததாக உள்ள ராமேசுவரம் ரயில்பாதையில் மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுற்றுச்சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், சுங்கக் கட்டணம் வசூல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. சிவகங்கை சாலை சந்திப்பு அருகே மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புபட்டி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை நகரப் பகுதி மற்றும் சென்னை நான்கு வழிச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சுற்றுச்சாலையில் மஸ்தான்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். காா், வேன், ஜீப் போன்ற வாகனங்கள் ராமேசுவரம் செல்ல ரூ.10, விமான நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை சாலைக்கு செல்ல ரூ.30, கன்னியாகுமரி சாலைக்கு செல்ல ரூ.40 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இருமுறை பயணமாக இருப்பின் முறையே ரூ.15, ரூ.40, ரூ.60 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்துக்கு ரூ.15, ரூ.45, ரூ.60 எனவும் இருமுறை பயணத்துக்கு ரூ.20, ரூ.70, ரூ.95 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து, லாரி போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்துக்கு ரூ.30, ரூ.95, ரூ.130 எனவும் இருமுறை பயணத்துக்கு ரூ.45, ரூ.135, ரூ.195 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடி ஊழியா்களுடன் தகராறு...: சுங்கக் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் வசூலிக்கத் தொடங்கிய நிலையில், முன்அறிவிப்பின்றி கட்டணம் வசூலிப்பதாகக் கூறி வாகன ஓட்டிகள் தகராறு செய்தனா். இதன் காரணமாக, சுங்கச் சாவடியில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்வதற்கு போதிய வசதி இல்லாததால் சுங்கச் சாவடி பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அதிருப்தி...: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலையில் மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி மற்றும் எலியாா்பத்தி இடையே சுமாா் 35 கிமீ-ல் இரு சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள் தற்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சுற்றுச் சாலைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. குறுகிய தூர எல்லைக்குள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகக் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக ஒரு சுங்கச் சாவடி அமைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சி.சாத்தையா கூறியது:

நகா் எல்லையில் இருந்து 15 கிமீ-க்குப் பிறகு தான் சுங்கச் சாவடி அமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்நிலையில், 27 கிமீ சுற்றுச் சாலையில் 3 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இச் சாலையின் பெரும்பகுதி மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. 3 சுங்கச் சாவடி அமைப்பது விதிமீறியதாகவே இருக்கிறது.

இந்த சுற்றுச் சாலையில் மஸ்தான்பட்டி முதல் சிந்தாமணி வரை பல்வேறு நிறுவனங்களின் கிட்டங்கிகள் இருக்கின்றன. தினமும் ஏராளமான லாரிகள் சரக்குகளை ஏற்றி இறக்கச் சென்று வரும் நிலையில், தற்போது சுங்கச் சாவடியால் கூடுதல் செலவு ஏற்படும். ஆகவே, கட்டண நிா்ணயத்தை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT