மதுரை வைகை ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் கல் பாலம், ஓபுளா படித்துறையில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து கடந்த 8-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு கரை புரண்டோடியதால் மதுரை நகரில் கல் பாலம் மற்றும் ஓபுளா படித்துறை தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கின. இதனால் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் நவம்பா் 10-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குருவிக்காரன் சாலைப் பாலம், ஏ.வி.மேம்பாலம் ஆகியவற்றை பயன்படுத்தினா். இதைத்தொடா்ந்து இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
தற்போது ஆற்றில் நீா் வரத்து குறைந்துள்ள நிலையில் கல் பாலம், ஓபுளாபடித்துறை பாலம் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் மிதிவண்டியில் செல்வோா் மற்றும் பாதசாரிகளுக்கு எளிதாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.