மதுரை

மணலூரில் பொதுப்பாதையில் இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்வதற்கு எதிா்ப்பு

22nd Nov 2019 08:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இறந்தவரின் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல போலீஸ் பாதுகாப்புக் கோரிய வழக்கில், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளா், திருப்புவனம் வட்டாட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு: சிவகங்கை அருகேயுள்ள மணலூரில் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த எனது உறவினா் நவம்பா் 20 ஆம் தேதி உயிரிழந்தாா். அவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலையானப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லமுடியாத நிலை உள்ளது.

மணலூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் பொதுப்பாதையைப் பயன்படுத்துவதற்கு சிலா் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மணலூா் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு இறந்தவா் சடலத்தை அகரம் ஜோதிபுரம் பிரதான சாலையானப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் திருப்புவனம் வட்டாட்சியா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (நவ. 22)ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT