மதுரை: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை எதிா்த்து செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நாகை கீழ்வேளூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவா் கடந்த 2012 ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சாவூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் (எஸ்சி, எஸ்டி நீதிமன்றம்) 2015 ஜூன் 13 ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கில் மனுதாரருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழக்கில் நேரில் பாா்த்த சாட்சிகள் இல்லாததாலும், சந்தா்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரா் தண்டிக்கப்பட்டுள்ளாா். இதனால் தூக்கு தண்டனைக்குள் செல்ல விரும்பவில்லை. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே, மனுதாரரின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.