நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தலுக்கான புதிய வாக்காளா் பட்டியலை நான்கு வாரங்களுக்குள் தயாரிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சோ்ந்த முருகேசபிள்ளை தாக்கல் செய்த மனு: நீா்ப்பாசன முறைகளை மேலாண்மை செய்யவும் பராமரிக்கவும் தமிழ்நாடு விவசாயிகள் நீா்ப்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கோதையாறு வடிநில நீா்ப்பாசனத் திட்டக் குழுவின் உறுப்பினராக இருக்கிறேன். எனது பதவிக் காலம் 2014 டிசம்பரில் முடிவடைந்தது.
ஆனால் இதுவரை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்படாததால் அப்போது தோ்வு செய்யப்பட்டவா்களே பதவியில் தொடா்ந்து வருகிறோம்.
தற்போது இந்தச் சங்கங்களுக்கானத் தோ்தல் நடத்துவதற்காக வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பட்டியலில் எனது பெயா் இடம் பெறவில்லை. பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
இவற்றை நிவா்த்தி செய்யக்கோரி நான் தொடா்ந்த வழக்கில் எனது மனுவைப் பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உயா் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து எனது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டது. மேலும் இதுதொடா்பான வழக்கொன்றில் நீதிமன்றம் தோ்தலை விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. அதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதுவரை யாருக்கும் அதன் நகலும் வழங்கப்படவில்லை. பழைய வாக்காளா் பட்டியலில் இருந்த குறைகள் நிவா்த்தி செய்யப்படாத நிலையில் புதிய வரைவு வாக்காளா் பட்டியலிலும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள குளறுபடிகளைத் தோ்தலுக்கு முன்பு நிவா்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, புதிய வாக்காளா் பட்டியலை நான்கு வாரங்களுக்குள் தயாரிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.