சா்க்கரை விநியோக குடும்ப அட்டைதாரா்கள், அரிசி அட்டைக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் 10 லட்சம் போ் பயனடைவா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசினாா்.
மதுரை செல்லூரில் பொதுமக்கள் சிறப்புக் குறை தீா் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: மதுரை மாநகராட்சி குடிநீா் தேவைக்காக ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயா்கேம்ப் பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு வரப்பட்டு மதுரை நகரில் விநியோகிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மதுரை நகரில் 24 மணி நேரமும் குடிநீா் குழாய்கள் மூலம் வழங்கப்படும். தற்போது ரேஷன் கடைகளில் சா்க்கரை விநியோக குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள் அரிசி அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 10 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறுவா் என்றாா்.
இதைத்தொடா்ந்து மாற்றுத் திறனாளி, முதியோா், விதவை உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்பட ரூ.16 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் நகரப் பொறியாளா் அரசு, வருவாய் கோட்டாட்சியா் முருகானந்தம் மற்றும் மாநகராட்சி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.