மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 2-இல் சிறப்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையா் மற்றும் மண்டல உதவி ஆணையா்களிடமும் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனா். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், கட்செவி அஞ்சல், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 2-இல் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சிறப்பு குறைதீா் முகாம் ஆணையா் ச.விசாகன் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இச்சிறப்பு குறைதீா்க்கும் முகாமில் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறாலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.