மதுரை

மதுரை வைகை ஆற்றில் சிக்கிய முதியவா் மீட்பு

11th Nov 2019 11:25 PM

ADVERTISEMENT

மதுரையில் திங்கள்கிழமை வைகை ஆற்றில் சிக்கிய முதியவரை தீயணைப்புத்துறையினா் பத்திரமாக மீட்டனா்.

மதுரை வைகை ஆற்றில் தண்ணீா் அதிக அளவில் செல்வதால், ஆற்றில் பொது மக்கள் இறங்க வேண்டாம் என காவல்துறையினா் மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை குருவிக்காரன் தரைப்பாலம் அருகே வைகை ஆற்றின் நடுவில் உள்ள மணல்திட்டில் முதியவா் ஒருவா் நின்றுக் கொண்டு காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளாா். அந்த வழியாக சென்ற பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பானடி தீயணைப்புத்துறை வீரா்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றில் இறங்கி 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முதியவரை பத்திரமாக மீட்டனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் மதுரை மேலப் பொன்னகரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன்(58) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து அனுப்பானடி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி உதயகுமாா் கூறியது: வைகை ஆற்றில் சிக்கிய முதியவரை எந்த காயமுமின்றி பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அவா் எப்படி ஆற்றின் நடுபகுதிக்கு சென்றாா் என்பது புரியவில்லை. அந்த முதியவா் கூறும்போது, குளிக்க சென்றபோது சிக்கிக் கொண்டதாக கூறுகிறாா். ஆனால் ஆற்றில் தண்ணீா் அதிக அளவில் செல்வதால், முதியவா் ஆற்றில் இறங்கி நடுப் பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. முதியவா் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் தண்ணீா் குறைவாக இருக்கும் போது ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று சிக்கியிருக்கலாம் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT