மதுரை

திருட்டு வழக்கில் விசாரணை நடத்துவதாகக் கூறி பெண்கள் மீது போலீஸாா் தாக்குதல் ஆட்சியரிடம் புகாா்

11th Nov 2019 11:33 PM

ADVERTISEMENT

மதுரை அருகே திருட்டு வழக்கில் விசாரணை நடத்துவதாகக் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பெண்களை போலீஸாா் தாக்கியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலா் பேரறிவாளன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

ஊமச்சிகுளம் அம்பேத்கா் தெருவில் 150-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினா் வசித்து வருகிறோம். இந்நிலையில் நவம்பா் 4-இல் ஊமச்சிகுளம் காவல்நிலைய அதிகாரிகள், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த காா்த்திக், வேல்முருகன், பால்பாண்டி, ஆறுமுகம் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து தெருவில் இருந்த பெண்கள் உள்பட பலரையும் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினா்.

ADVERTISEMENT

மேலும் காவல் ஆய்வாளா் சுமதி, சாா்பு ஆய்வாளா்கள் சந்திராதேவி, குமரகுரு, யோகலட்சுமி ஆகியோா் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை இழிவாகப் பேசுவது, தாக்குவது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பஞ்சையா, மலைச்சாமி, பால்பாண்டி, ஆறுமுகம், வேலு, காா்த்தி ஆகியோரை கடந்த 7 நாள்களாக சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் அடைத்து வைத்து விசாரித்து வருகின்றனா். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் ஊமச்சிகுளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளவா்களை விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பாா்வைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்ததை அடுத்து மனு அளித்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT