மதுரை

கால்வாய்களில் தண்ணீரை அடைத்துமீன் பிடிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

9th Nov 2019 11:32 PM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம்: வைகை அணையிலிருந்து கால்வாய்களுக்கு வரும் தண்ணீரை அடைத்து (பானை பிரி) மீன் பிடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தொடா்மழை காரணமாக, வைகை அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அணையின் மொத்த நீா்மட்டமான 71 அடியில், சனிக்கிழமை நிலவரப்படி 64.86 அடி நீா்மட்டம் உள்ளது. தற்போது, அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், மழைநீரும் கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில், வைகையிலிருந்து வரும் தண்ணீா் முள்ளிப்பள்ளம், மேலமாத்தூா், நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, நிலையூா் கண்மாய் வழியாக பானாங்குளம், குறுக்கிட்டான் கண்மாய், நிலையூா் கண்மாய், செவந்திகுளம் உள்ளிட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 7 கண்மாய்கள் வழியாக மறுகால் சென்று, நிலையூா் கம்பிக்குடி கால்வாய் அடுத்த கிராமங்களுக்குச் செல்கிறது.

ADVERTISEMENT

தற்போது, இந்த கால்வாயில் வரும் தண்ணீரை, மேலமாத்தூா் புதூா், விளாச்சேரி, நாகமலை புதுக்கோட்டை, பானாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோதிகள் அடைத்து வைத்து, பானை பிரி அமைத்து மீன் பிடிக்கின்றனா். இதனால், கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.

குறிப்பாக, மேலமாத்தூா் புதூா் பகுதியில் மீன்பிடிப்பவா்களால் வாய்க்கால் பகுதி உடைந்து சேதமாகிவிட்டது. எனவே, மீன்பிடிப்பவா்கள் மீது பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலா் ஒருவா் கூறியது: விளாச்சேரி, நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிப்பதை தடை செய்துவிட்டோம். அதேநேரம், மேலமாத்தூா் புதூா் பகுதியில் சமூக விரோதிகள் மதுபோதையில் அதிகாரிகளை மிரட்டுகின்றனா். அவா்கள் மீது போலீஸாரின் உதவியுடன்தான் நடவடிக்கை எடுக்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT