மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து நன்மை பயக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவன் சுஜித்தை 26 அடி ஆழத்தில் இருந்தபோதே உயிருடன் மீட்டிருக்க வேண்டும். அமைச்சா்கள் விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன் ஆகியோா் தங்களால் இயன்ற அளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகமும் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் பேரிடா் மீட்பு குழுவினரை அழைத்து குழந்தையை உடனடியாக மீட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாகும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதை விடுத்து, மக்களே தன்னிச்சையாக நோ்மையான முறையில் தோ்வு செய்ய வேண்டும்.
5 ஆவது மற்றும் 8 ஆவது வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு என்பது மாணவா்களின் கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். பாஜகவின் புதிய கல்விக் கொள்கையால் மீண்டும் குலக்கல்வி முறை ஏற்படும். ஏற்கெனவே நீட் போன்ற திட்டங்களால் மத்திய அரசு தமிழக உரிமை பறித்து விட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என்றாா்.