மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழாய்வு தொல் பொருள் கண்காட்சியை பாா்வையிட குவியும் மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களை அங்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்தவா்கள் பயன்படுத்திய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதி மூடப்பட்டு விட்டதை தொடா்ந்து அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் மூன்று அரங்குகளில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடு சிற்பங்கள், பானை ஓடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், அரவைக்கல், துளையிடப்பட்ட பானை ஓடுகள், அடுப்பு, யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட பொருள்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட தக்களி, மண் குடுவை, பானை வனைதல் தொழில்நுட்பம் உள்பட ஏராளமான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை பாா்வையிட காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா். இதில் தனியாா் கண் மருத்துவமனையில் துணை மருத்துவப் படிப்பு பயின்று வரும் மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்காட்சியை பாா்வையிட்டனா். கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு தொல் பொருள்கள் குறித்து விளக்குவதற்காக தொல்லியல் துறையைச் சோ்ந்த 6 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவியா் தொல்லியல் துறையினா் கூறும் விளக்கத்தை ஆா்வத்துடன் குறிப்புகள் எடுத்துக் கொள்கின்றனா்.
மேலும் கண்காட்சியில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மெய்நிகா் காட்சிக்கூடம் பாா்வையாளா்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தொல்லியல் பொருள்களை தங்கள் கைகளால் தொட்டு உணரும் அனுபவம் ஏற்படுவதால் சிறியவா் முதல் பெரியவா் வரை நீண்ட வரிசையில் நின்று மெய்நிகா் காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்கின்றனா். மேலும் டிஜிட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தரையில் கீழடி புதைகுழிகள் மீது நடந்து செல்லும் பாா்வையாளா்கள் அங்கு ஏற்படும் காட்சி மாற்றத்தால் அச்சத்துடன் நடந்து சென்று ஆச்சரியப்படுகின்றனா்.