வனச்சரகரின் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தமிழக வனத்தோட்ட நிர்வாக இயக்குநர் ஆஜராக உத்தரவு

விருத்தாசலத்தைச் சேர்ந்த வனச்சரக அலுவலரின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில்

விருத்தாசலத்தைச் சேர்ந்த வனச்சரக அலுவலரின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி, தமிழக வனத்தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: நான் 2011ஆம் ஆண்டு வனத்துறையில் வனவராக பணியில் சேர்ந்தேன். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு வனச்சரக அலுவலராக பதவி உயர்வு பெற்று விருத்தாசலம் வனச்சரகத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது அப்பகுதியில் வனத்துறை தரப்பில் இருந்து சில முறைகேடுகள் நடப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். இதனை காரணமாக கொண்டு, 2017 ஆம் ஆண்டு மேல்சங்கம் வனச்சரகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணியிடமாற்றத்திற்கு இடைக்காலத் தடைபெற்றேன். அதனைத் தொடர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர் அதே ஆண்டு வனச்சரக அலுவலராக இருந்த நான் வனவராகப் பணிஇறக்கம் செய்யப்பட்டேன். இதற்கும் நீதிமன்றத்தை நாடி, இடைக்காலத் தடை உத்தரவை பெற்று வனச்சரக அலுவலராக பணிசெய்து வந்தேன். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி மாவட்டத்தில் வனத்துறை பறக்கும்படை அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இதுவும் என்னைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டது தான். மேலும் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே நான் ஏற்கெனவே பணியாற்றி வந்த விருத்தாசலம் வனச்சரகத்தில் வனச்சரக அலுவலராகப் பணியாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்க தமிழக வனத்தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் கே.வி.கிரிதரன் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com