உசிலம்பட்டி அருகே சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா

உசிலம்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை  சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை

உசிலம்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை  சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி  வழிபட்டனர்.
இக் கோயில்  திருவிழா கடந்த 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை  அம்மன் பவனி வருதல், காளியம்மன் பூஞ்சோலை செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  அம்மனுக்கு கரகம் எடுத்தல், அம்மன் தங்கத் தேரில் பவனி வருதல், பூக்குடை, முளைப்பாரி எடுத்தல்  உள்ளிட்டவை  நடைபெற்றன. திங்கள்கிழமை பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், தவழும்பிள்ளை, காளை, பாதம், கை, உள்ளிட்ட நேர்த்திக்கடன், கரும்பில் தொட்டில் கட்டுதல், மாவிளக்கு, கண்மலர் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். செவ்வாய்க்கிழமை  அதிகாலைவரை பொங்கல், அக்னிசட்டி எடுத்தல் ஆகியன  நடைபெற்றன. 
அதன்பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதே போல், அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, செவ்வாய்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. திங்கள்கிழமை  அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி, உருண்டு கொடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை  அதிகாலை 4 மணியளவில் அத்திபட்டி வரதராஜ சுவாமிகள் 21 அலகு குத்தி சப்பரம் இழுத்து, கையில் அக்னி சட்டி ஏந்தி, முக்கிய வீதிகளில் பவனி வந்தார். 
விழாவிற்கு அத்திபட்டி அருகிலுள்ள கேத்துவார்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, பெரியபூலாம்பட்டி, சின்னப்பூலாம்பட்டி, வீராளம்பட்டி, சேடபட்டி, ஜம்பலப்புரம், சாப்டூர், கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com