வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய எல்.ஹெச். பி. பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) இணைக்கப்படுகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான பெட்டிகளைவிட, எல்.ஹெச்.பி. பெட்டிகள் எடை குறைவானவை. இட வசதி அதிகம் கொண்டது. சாதாரண பெட்டிகளை ஒப்பிடும்போது, எல்.ஹெச்.பி பெட்டிகளில் பயணத்தின்போது அதிர்வு குறைவாக இருக்கும். இப்பெட்டிகள் தடம் புரண்டு கவிழாது என்பதால் கூடுதல் பாதுகாப்பு உடையது.
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில், திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் ஆகியவற்றில் ஏற்கெனவே நவீன எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இவை படுக்கை வசதி கொண்ட ரயில்களாகும். தற்போது இருக்கை வசதி கொண்ட வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் இத்தகைய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் புதிய வசதிகளுடன் கூடிய எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை (12636/ 12635) வைகை விரைவு ரயிலில் மதுரையில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி முதலும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 1 ஆம் தேதியில் இருந்தும் புதிய பெட்டிகள் இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர் - காரைக்குடி - சென்னை எழும்பூர் (12605/12606) பல்லவன் விரைவு ரயிலில் சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 30ஆம் தேதி முதலும், காரைக்குடியில் இருந்து ஜூலை 1 ஆம் தேதியில் இருந்தும் புதிய பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 3, குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 13, சமையல் வசதி பெட்டி, காப்பாளர் மற்றும் மின்இயந்திர பெட்டிகளும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.