மதுரையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ஆசைப்பட்டு ரூ. 5 லட்சத்தை வட மாநிலத்தவர் இருவரிடம் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் வெள்ளிக்கிழமை பறிகொடுத்தார்.
மதுரை வடக்கு மாசி வீதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவரிடம் வட மாநிலத்தை சேர்ந்த இருவர், தங்கள் தாயார் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. தங்களிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளன, அதை வைத்துக் கொண்டு ரூ.5 லட்சம் வழங்கினால் போதும் என கூறியுள்ளனர். இதையடுத்து, சீனிவாசன் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளுக்கு ஆசைப்பட்டு பணம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், சீனிவாசன் பணத்தை எடுத்துக்கொண்டு அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே சென்று நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த வட மாநிலத்தவர் இருவர் சீனிவாசனிடம் பணம் தயாராக உள்ளதா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் வைத்திருந்த பையைக் காண்பித்துள்ளார். அப்போது வட மாநிலத்தவர் இருவரும் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில், அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மதிச்சியம் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் சிசிடிவி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.