மதுரை

மேலவளவு படுகொலை நினைவு தினம்: வாடகை, திறந்த நிலை வாகனங்களில் செல்ல தடை: ஆட்சியர் உத்தரவு

29th Jun 2019 08:12 AM

ADVERTISEMENT

மேலவளவு படுகொலை நினைவு தினத்தையொட்டி,  அஞ்சலி செலுத்துவதற்கு வாடகை, திறந்த நிலை வாகனங்களில் செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் வெள்ளிக்கிழமை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் 5 நபர்கள், 1997-இல் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து மேலவளவு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 நிகழ் ஆண்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில்,  மேலவளவு நினைவிடத்துக்கு வாடகை வாகனங்கள் மற்றும் சொந்தமாகப் பயன்படுத்தும் திறந்தவெளி வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூன் 29) மாலை 6 மணி முதல் ஜூலை 1 ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.  
இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT