மதுரை

பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரிகளுக்கு இயக்குநர்கள் நியமனம்

29th Jun 2019 08:07 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரிகளுக்கு இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை அவுட்போஸ்ட், திண்டுக்கல், தேனி, பெரியகுளம் மற்றும் பழனி ஆகிய பகுதிகளில் மாலை நேரக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த மாலை நேரக்கல்லூரிகளில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகத்தை கவனித்து வந்தனர். 
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.செல்லத்துரை பதவிக்காலத்தில் இந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு மாலை நேரக்கல்லூரிகளுக்கு  வெளி நபர்கள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். 
இந்த இயக்குநர்களுக்கு தனியாக ஊதியமும் வழங்கப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், தற்போது காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்து வரும் மு.கிருஷ்ணன் மாலை நேரக்கல்லூரிகளில் இயக்குநர்கள் பொறுப்பில் இருந்த வெளி நபர்களை நீக்கி உத்தரவிட்டார். மேலும் பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர்களை மாலை நேரக்கல்லூரிக்கு இயக்குநர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியர் சதாசிவம் மதுரை மாலை நேரக்கல்லூரிக்கும், கணிதத்துறை உதவிப்பேராசிரியர் ஆசிர் திண்டுக்கல் மாலை நேரக்கல்லூரிக்கும், வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் கணேசன் தேனி மாலை நேரக்கல்லூரிக்கும், பொது நிர்வாகவியல் துறை உதவிப்பேராசிரியர் பிரபாகரன் பெரியகுளம் மாலை நேரக்கல்லூரிக்கும், பாலகிருஷ்ணன் பழனி மாலைநேரக்கல்லூரிக்கும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாலை நேரக்கல்லூரி இயக்குநர்கள் தங்களது பல்கலைக்கழக பணியோடு  வாரத்தில் மூன்று நாள்கள் மாலை நேரக்கல்லூரி பணியை கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மேலும் இவர்கள் வகிக்கும்  இயக்குநர்கள் பொறுப்புக்காக மதிப்பூதியம் மட்டுமே  வழங்கப்படும். இதனால் ஏற்கெனவே மாலை நேரக்கல்லூரி இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தொகை மிச்சப்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT