மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.77 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு வார்டுகளில் சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 18-ஆவது வார்டு சுப்ரமணிய பிள்ளை தெரு, பார்த்தசாரதி சாலை, அன்னை அபிராமி தெரு, வினோத் சாலை, மல்லிகை தெரு, பாஸ்டின் நகர், நேதாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.21 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 22-ஆவது வார்டு கோச்சடை அங்காள ஈஸ்வரி நகர், டிபிஎம் ராதா நகர், முடக்குச்சாலை இந்திராணி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை மற்றும் எச்எம்எஸ் காலனியில் ரூ.39 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணியையும், பெத்தானியாபுரம் கழிவு நீரேற்று நிலையத்தில் ரூ.14.90 லட்சம் செலவில் புதிய கிணறு அமைக்கும் பணியையும், 19 ஆவது வார்டு சொக்கலிங்க நகரில் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் தெருவில் புதிய பாதாளச் சாக்கடை குழாய் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.
முன்னதாக அவனியாபுரம் சுற்றுச்சாலை, சுந்தர்ராஜபுரம், காஜா தெரு, ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி, எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் புதிய கட்டட வரைபட அனுமதி வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் ஐ.ரங்கநாதன், உதவி ஆணையர் முருகேச பாண்டியன், உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.