மதுரை

பட்டுப்போன மரங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

31st Jul 2019 09:40 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் வறட்சியால் பட்டுப் போன தென்னை மரங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  அதன் மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க நிர்வாகி அடக்கி வீரணன், தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி முத்துப்பேயாண்டி, சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் கே.முகமது அலி பேசியது: தேசிய அளவில் தமிழகம், கேரளத்தில் மட்டுமே தென்னை சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. அதிலும் கேரளத்தை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தென்னை விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் 50 லட்சம் ஹெக்டேர் அளவில் வளர்க்கப்பட்டிருந்த தென்னை மரங்கள் பட்டுப் போயின. தப்பிப் பிழைத்த தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் தேங்காய்களுக்கும், கொப்பரைகளுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. பெரும் எண்ணெய் நிறுவனங்கள் இவற்றை மொத்தமாக மலிவு விலைக்கு வாங்கி இருப்பு வைத்து மோசடியில் ஈடுபடுகின்றன. 
இதனால் தென்னை விவசாயிகள் கடும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். உரித்த தேங்காய் கிலோவுக்கு ரூ.51, கொப்பரைத் தேங்காய் கிலோவுக்கு ரூ.120 நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தென்னை வாரிய அலுவலகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும். 
மேலும், முழுமையான மானியத்துடன் கூடிய சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT