பூமாலை வணிக வளாகத்தில் செயல்படக் கூடிய கடைகளை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் எதிரே, ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் பூமாலை வணிக வளாகம் செயல்படுகிறது. இரு தளங்களுடன் உள்ள இந்த வணிக வளாகத்தை விக்கிரமங்கலம் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது.
இந்த வளாகத்தில் மொத்தம் உள்ள 35 கடைகளில் தற்போது 20 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அலுவலகங்களுக்கு ஒப்படைக்க உள்ளதால், கடைகளை காலி செய்யுமாறு திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் மேல்தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி அண்மையில் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் மேல்தளம் பழுதான நிலையில் இருப்பதால் அங்குள்ள உதவி திட்ட அலுவலர் அலுவலகங்களுக்கு வேறு இடம் வழங்கும் வகையில், கடைகளை காலி செய்யுமாறு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் நோட்டீஸில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடைகளை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளனர். மாற்று இடம் வழங்காமல் திடீரென இடமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதோடு, ஊரக வளர்ச்சி முகமைக்கு ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, தற்போது அலுவலகத்துக்கு தேவையான அளவிலான கடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அனைத்துக் கடைகளையும் காலி செய்யுமாறு கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.