மதுரை

குடிமராமத்து பணி: நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின்  விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

30th Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

குடிமராமத்து பணிகளை, நீரினை பயன்படுத்துவோர், விவசாயிகள் வைத்து மேற்கொள்ள உத்தரவிடக்  கோரிய வழக்கில் தமிழகத்தில் உள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் விவரங்களை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயச் சங்க கௌரவத் தலைவர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குடிமராமத்து பணி என்ற பெயரில் நீர் நிலைகள் தூர்வாரப்படுகின்றன. இந்த தூர்வாரும் பணிகளுக்காக 2016- 2017  நிதியாண்டில் ரூ.100 கோடியும்,  2017- 2018 நிதியாண்டில் ரூ.329.95 கோடியும், 2019- 2020 நிதியாண்டில் ரூ.499.68 கோடியும் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. குடிமராத்து பணியைத் தமிழ்நாடு விவசாயிகள் மேலாண்மை முறைகள் சட்டம்- 2000 அடிப்படையில் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் 1975-ல் குடிமராமத்து பணிக்காக பொதுப்பணித்துறையால் உருவாக்கப்பட்ட விவசாயிகள் குழுவை வைத்து மேற்கொள்ள வேண்டும். ஆனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டல பொதுப் பணித்துறை அதிகாரிகள் குடிமராமத்து பணிகளை, நீரிணை பயன்படுத்துவோர், விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்களைக் கொண்டு மேற்கொள்வதில்லை. 85 சதவீதான குடிமராமத்து பணிகள் பொதுப்பணித்துறை பணிகளைப் போலவே மேற்கொள்ளப்படுகிறது.
குடிமராமத்து பணிகள் தொடர்பாகப் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் 2017 ஜனவரி 21-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், விதி 9 (வி) (சி)-இல் குடிமராமத்து பணியை மேற்கொள்ளும் அமைப்புகளை தேர்வு செய்ய விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த விதியைப் பயன்படுத்தி உள்ளூரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் 7 பேர் சேர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களை தொடங்கி, ஆயக்கட்டுதாரர்கள், விவசாயிகள் இல்லாமல் குடிமராமத்து பணி மேற்கொள்கின்றனர். குடிமராமத்து பணிகளை தேர்வு செய்வதை ரகசியமாக வைத்துள்ளனர். 
குடிமராமத்து பணி தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட 10 அரசாணைகளில், 2 மட்டுமே பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அரசாணைகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதால் அவை ரகசியமாக உள்ளன. எனவே புதிய சங்கங்களுக்கு குடிமராமத்து பணி வழங்க வகை செய்யும் அரசாணை விதி 9 (வி) சி செல்லாது என அறிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் மேலாண்மை முறை சட்டம் -2000 அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் 1975-ல் ஆண்டில் பொதுப்பணித்துறையால் குடிமராமத்து பணிக்காக தொடங்கப்பட்ட விவசாயிகள் குழுவுக்கு மட்டும் குடிமராமத்து பணி வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இதே கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கலாகி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீரிணை பயன்படுத்துவோர் சங்கங்களின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT