மதுரை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

29th Jul 2019 08:47 AM

ADVERTISEMENT

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனர்.
    மதுரை கீழமாசி வீதி மேலநூற்பாலை தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (30). இவர் சனிக்கிழமை காலையில் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருள்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன.
     இதையடுத்து போலீஸாருக்கு தங்கபாண்டியன் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. 
  இதுகுறித்து தங்கபாண்டியன் அளித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: நாகமலை புதுக்கோட்டை அருகே சாமக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி வர்ஷிதா (37) . இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்றுவிட்டு தேனி- மதுரை பிரதான சாலையில் மாவுமில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வர்ஷிதா கழுத்திலிருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
 இதுகுறித்து வர்ஷிதா அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT