மதுரை

கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் தேவை: சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

29th Jul 2019 08:45 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் தென் மண்டல பொதுக்கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் கோ.சுரேஷ் தலைமை வகித்தார். மாநிலச்செயலர் எம்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்டத் தலைவர் ஜெயகணேஷ் வரவேற்றார். இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டுமென்ற பழைய விதிகளை தளர்த்தி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தங்கி பணிபுரியும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். 
நில அளவையர்களுக்கு உள்ளது போல கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தமிழ் நிலம் இணைய பக்கத்தில் புலப்படங்களை பார்வையிடும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து பதவி உயர்வு மற்றும் மாறுதல்கள் வழங்கிட வேண்டும். இணைய வழியில் பணிகளை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்வட்ட அளவில் விரிவான கணினி பயிற்சி அளிக்க வேண்டும். வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதள வழியில் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இணைய வசதியுள்ள "டேப்லட்' செல்லிடப்பேசிகளை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கும்போது 30 சதவீதம் முழுவதையும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
 பதவி உயர்வின்போது அருகாமையில் உள்ள மாவட்டங்களையும் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்வசதி , கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தமிழக அரசின் அம்மா திட்ட ஏற்பாடுகளுக்கான தொகை ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்டும். மேலும் மக்களவை தேர்தல் செலவினங்களான சாமியானா பந்தல் அமைத்தல் மற்றும் வாக்குச்சாவடி முன்னேற்பாடு நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாநில அளவில் முதன்மைச்செயலர் மற்றும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT