மதுரை

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்குவதில் சுணக்கம்'

22nd Jul 2019 08:15 AM

ADVERTISEMENT

மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனைக்கு நிலம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 நடிகர் சிவாஜி கணேசனின் 18-ஆவது நினைவு நாளையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜி கணேசன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இரு முறை நேரில்  சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவுபெறும் வகையில் போதுமான நிதி ஒதுக்குவதாகவும் உறுதி அளித்தார். 
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழுமையாக நிலம் வழங்குவதில் தற்போது வரை சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், அதன் பொதுச்செயலர் க. ஜான்மோசஸ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அரசியல் கட்சியினர், சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT