மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவ கோரிக்கை

16th Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

மதுரை ரயில் நிலையத்தின் நுழைவாயில் முன்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவ்வமைப்பினர் இக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் த.சு.ராஜசேகரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன் விவரம்: தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் நினைவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளன. மதுரை நகரம் பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்ததை நினைவுகூரும் வகையில், மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலின் முன்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
மதுரை ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்ற காரணத்தால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அச் சிலை அகற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் நிறுவப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை மீன் சிலை வைக்கப்படவில்லை. ஆகவே, ரயில் நிலையத்தின் முன்பகுதியில் மீன் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT