தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி செங்கோல் ஆதீனத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் நிலம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்களில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, சமய பணிகளையும், தொண்டுகளையும் செங்கோல் ஆதீன மடம் செய்து வந்தது.
இந்நிலையில், ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், வருமானம் குறைந்து, சமய மற்றும் தொண்டு பணிகள் தடைப்பட்டுள்ளன.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள், இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோரை கொண்டு குழு அமைத்து, செங்கோல் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை 2018 பிப்ரவரியில் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கவும், பதிவுத்துறை தலைவர் அதனை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் இந்து அறநிலையத்துறை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.