மதுரை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி : அரசுப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்

12th Jul 2019 09:20 AM

ADVERTISEMENT

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசுப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்திய ஒப்பந்த ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வியாழக்கிழமை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அரசுப்போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் 189 ஓட்டுநர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். 240 நாள்கள் தொடர்ந்து பணிபுரிந்தால் நிரந்தர பணி வழங்கப்படும் என்ற சூழலில் ஓட்டுநர்கள் 1,400 நாள்களுக்கு மேல் பணிபுரிந்தும் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. 
இதையடுத்து ஒப்பந்த ஓட்டுநர்கள் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். 
முதல் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததையடுத்து இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து ஒப்பந்த ஓட்டுர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்,  போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. 
இதையடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஒப்பந்த ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பணி நிரந்தரம் அறிவிக்காவிட்டால் அன்றைய தினமே மீண்டும் போராட்டம் தொடங்கும் என்று தெரிவித்து வியாழக்கிழமை பிற்பகலில் காத்திருப்பு போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக ஒப்பந்த ஓட்டுநர்கள் கூறியது:  கடந்த 2105-இல் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டோம். தினசரி ரூ.285 சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை. மதுரை மண்டலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளி மண்டலங்களில் இருந்து இடமாற்றம் மூலம் நிரப்பி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியதைத் தொடர்ந்து தற்போது தினசரி ரூ.436 சம்பளம் வழங்கப்படுகிறது. வார விடுமுறை உள்ளிட்ட எந்த சலுகையும் கிடையாது. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் தான் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினோம். 
பேச்சுவார்த்தையில் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT