மதுரை

நிலத்தடி நீர்வளம் அபாயகரமாக இருக்கும் பகுதிகளில் 5 அம்ச செயல்திட்டம்: "ஜலசக்தி அபியான்' இயக்க ஒருங்கிணைப்பு அலுவலர் தகவல்

12th Jul 2019 09:21 AM

ADVERTISEMENT

நிலத்தடி நீர்வளம் அபாயகரமாக இருக்கும் பகுதிகளில்  5 அம்ச செயல்திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்  என்று மத்திய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் (ஜல சக்தி அபியான்) ஒருங்கிணைப்பு அலுவலர் விஸ்மிதா தேஜ் கூறினார்.
நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் வகையில் மத்திய அரசு, நீர் மேலாண்மை  மற்றும் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நிலத்தடி நீரின் வளம் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு இந்த இயக்கத்தின் மூலம்,  நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் விஸ்மிதா தேஜ் தலைமையிலான 7 பேர் குழுவினர் பங்கேற்றனர்.  விவசாயிகள், நீர் மேலாண்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. 
இக்கூட்டத்தில் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பு அலுவலர் விஸ்மிதா தேஜ்  பேசியது:  நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேமிப்பு,  பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை  நீர் உறிஞ்சு குழிகளாக மாற்றுவது,  நீர்வடிப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவது,  மரக்கன்றுகள் நடுவதை தீவிரப்படுத்துவது ஆகிய 5 செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்வளம் அபாயகரமாக உள்ள பகுதிகளை மத்திய நீர்வள ஆணையம் கண்டறிந்துள்ளது. அப் பகுதிகளில் மேற்குறிப்பிட்ட 5 செயல்திட்டங்களும் தீவிரப்படுத்தப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் பேசியது: மதுரை மாவட்டத்தில்  கருமாத்தூர், சிந்துபட்டி, நாகமலை புதுக்கோட்டை, வெள்ளலூர், கொட்டாம்பட்டி, மூடுவார்பட்டி , சேடபட்டி, கொக்குளம் ஊராட்சிகள், அ.வல்லாளபட்டி, பாலமேடு பேரூராட்சிகள்,  திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிகள், மதுரை மாநகராட்சியின் மேற்குப் பகுதி வார்டுகள் நிலத்தடி நீர்வளம் மிகவும் குறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் நீர்மேலாண்மை இயக்கத்தின் செயல்திட்டத்தின்படி நிலத்தடி நீரின் வளத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
 முன்னதாக,  நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க குழுவினர் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினர். மதுரை மாநகராட்சியில் உள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பின் செயல்பாடு எப்படி இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினர்.
 இதற்குப் பதில் அளித்த மாநகராட்சிப் பொறியியல் பிரிவு அலுவலர்,  மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாதவர்கள் உடனடியாக அவற்றை ஏற்படுத்துமாறு கடந்த 2 நாள்களாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
கடந்த ஓராண்டில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று வனத்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பியது, அதைப் பற்றிய விவரம் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலரிடம் இல்லை. ஆனால், வனப் பகுதியில் தடுப்பணை கட்டியது குறித்து பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அதையடுத்து, மரக்கன்று நட்ட விவரத்தை அளிக்குமாறு குழுவின் ஒருங்கிணைப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பி.அம்ரித்,   குழு உறுப்பினர்கள் மத்திய உள்விவகாரங்கள் துறை அலுவலர்கள் ஏ.ராதா ராணி, எம்.சுப்பிரமணியன்,  விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அன்சுமாலி ரஸ்தோகி, மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானி பி.அபிஷேக்,   நீர் மேலாண்மை ஆலோசனை நிறுவனப் பொறியாளர் சதீஷ் கில்நானி,  மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி  சி.கிருஷ்ணய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் இக் குழுவினர்,  நிலத்தடி நீர்வளத்தைச் செறிவூட்டுவதற்காக ஊரக வளர்ச்சித் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT