மதுரை

சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் உடனுக்குடன் தீர்வு: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

12th Jul 2019 09:16 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியில் புதன்கிழமைகளில் நடைபெறும் சிறப்புக் குறைதீர்கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு அளிக்கப்படும் என்று மாநகராட்சி  நிர்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு மண்டலம் வீதம் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வரைபட அனுமதி, தொழில் உரிமம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு ஆகிய கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் விதமாக 4 மண்டலங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. 
பொதுமக்களிடம் இருந்து ஓரிரு நாள்களில் முடிக்கக் கூடிய அல்லது அனுமதி வழங்கக் கூடிய இனங்களுக்கு மட்டுமே மனுக்கள் பெறப்படும். இதன்படி மண்டலம் எண் 1-இல், 10-ஆவது வார்டு ஆரப்பாளையம், 11-ஆவது வார்டு பொன்னகரம், 12-ஆவது வார்டு கிருஷ்ணாபாளையம் ஆகிய வார்டுகளுக்கு ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் உள்ள கலைவாணர் மகப்பேறு மருத்துவமனையிலும், மண்டலம் 2-இல் 29 ஆவது வார்டு மஸ்தான்பட்டி, 30-ஆவது வார்டு மேலமடை, 31-ஆவது வார்டு தாசில்தார் நகர், 32-ஆவது வார்டு வண்டியூர் ஆகியவற்றுக்கு மேலமடை வார்டு அலுவலகத்திலும்,  மண்டலம் 3-இல் 70-ஆவது வார்டு காமராஜபுரம், 71-ஆவது வார்டு பாலரெங்காபுரம், 72-ஆவது வார்டு நவரத்தினபுரம், 73-ஆவது வார்டு லெட்சுமிபுரம் ஆகியவற்றுக்கு சிஎம்ஆர் சாலையில் உள்ள உதவிப்பொறியாளர் அலுவலகத்திலும்,  மண்டலம் 4-இல் 77-ஆவது வார்டு சுந்தராஜபுரம், 90-ஆவது வார்டு வீரகாளியம்மன் கோவில், 91-ஆவது வார்டு தென்னகரம் ஆகிய பகுதிகளுக்கு சுந்தராஜபுரம் வார்டு அலுவலகத்திலும் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
இம்முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினால் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அனுமதி ஆணை வழங்கப்படும். 
முகாமில், வரை பட அனுமதிக்கு வீட்டு வரி, குழாய் வரி பாதாளச்சாக்கடை கட்டணம் ஆகியவற்றுக்கு நடப்பு அரையாண்டு வரி செலுத்தியிருக்க வேண்டும். உரிமம் பெற்ற வரைவாளர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச்சாக்கடை இணைப்புக்கு, ஆதார் அட்டை நகல் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை, இறுதியாக செலுத்திய வீட்டு வரி, பாதாளச் சாக்கடை ரசீது நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். புதிய வரிவிதிப்புக்கு, வீட்டு பத்திர நகல், காலிமனை வரி ரசீது நகல், வரைபட அனுமதி நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்ய, வீட்டு வரி, குழாய் வரி, பாதாளச் சாக்கடை பங்களிப்புத் தொகை ரசீது, வீட்டுப் பத்திர நகல் நோட்டரி பப்ளிக் சான்றுடன் வழங்க வேண்டும். 
காலிமனை வரி விதிப்புக்கு, வீட்டு மூல பத்திர நகல் நோட்டரி பப்ளிக் சான்றுடன், ஏதேனும் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொழில் வரி விதிப்புக்கு, கடையின் விவரம், வீட்டு வரி ரசீது நகல் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். ஆவணங்கள் பரிசீலனைக்கு பின்னர் ஒரே நாளில் மேற்கண்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படும்.  மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த குறைதீர் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT