மதுரை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை: ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

4th Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழக அரசின் சார்பில் வேலை வாய்ப்பற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி பொதுப்பிரிவில் பதிவு செய்து குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 
உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் 45-ம், இதர வகுப்பினர் 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும். 
சுய வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் பெறும் எந்த பணியிலும் இருத்தல் கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் சார்பில் எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. தினசரி பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவராக இருக்கக் கூடாது. 
மேலும் தமிழக அரசு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் உள்ளது. இதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த குறைந்த பட்சம் ஓராண்டு நிறைவு பெற்ற எழுதப்படிக்கத் தெரிந்தது முதல் பட்டதாரி வரையிலான மாற்றித்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். 
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குள்பட்ட தகுதியுடைய அனைவரும் அலுவலக வேலை நாளில் வேலை வாய்ப்பக அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றுகளுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 
மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில் கல்வி பதிவுதாரர்கள்  வரவேண்டியது இல்லை. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவர்களும் மீண்டும் வரவேண்டியது இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். 
மேலும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பதிவர்கள் ஓராண்டு முடிவுற்றிருந்தால் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலக துணை இயக்குநர் ந.மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT