மதுரை

திருப்பரங்குன்றம் கோயில் திருமஞ்சனத்திற்கு மீண்டும் சரவணப் பொய்கையிலிருந்து தீர்த்தம்

4th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருமஞ்சனத்திற்கு மீண்டும் புதன்கிழமை முதல் தீர்த்தம் எடுக்கும் பணி தொடங்கியது.    
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் கோயில் யானை சரவணப் பொய்கைக்கு சென்று திருமஞ்சனத்திற்காக புனித தீர்த்தம்  எடுத்து வருவது வழக்கம். அவ்வாறு கொண்டு வரும் தீர்த்தமானது கோயில் கொடிமரத்தின் அடிப்பாகத்திலும், அதன் அருகில் உள்ள பலி பீடத்திலும் அபிஷேகம் செய்யப்படும். 
இந்நிலையில் சரவணப் பொய்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மீன்கள் அதிகளவில் இறந்து மிதந்தன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவைகளை கொண்டு குளிப்பதால் பொய்கை தண்ணீர் முழுவதும் அசுத்தமானது. 
இதையடுத்து  திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுத்து செல்வதை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இதனால் சரவணப் பொய்கை தண்ணீரை மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் கோயில் நிர்வாகம் சுத்தப்படுத்தும் பணியை கடந்த 3 மாதங்களாக செய்து வருகிறது. 
தற்போது பொய்கை தண்ணீர் 60 சதவீதத்திற்கு  மேல் சுத்தமானதால் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதன்கிழமை அதிகாலை  முதல் கோயில் பரிஜாதர்  தலைமையில், மேள தாளங்கள் முழங்க கோயிலில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு  சரவணப் பொய்கையில் திருமஞ்சனத்திற்காக தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 
அந்த தீர்த்தம் கோயில் கொடிமரத்தின் அடிபாகம் மற்றும் பலிபீடத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. இனிமேல் தொடர்ந்து திருமஞ்சனத்திற்காக சரவணப் பொய்கையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT